கல்வியின் சிறப்பு கட்டுரை
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
கல்வியின் சிறப்பு
கல்வியின் முக்கியத்துவம்
கல்வியின் பயன்கள்
கல்வியால் உயர்ந்தவர்கள்
முடிவுரை
முன்னுரை
இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். கல்வியின் சிறப்பினைத் திருவள்ளுவர் “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என வலியுறுத்துகின்றார்.
இன்றைய காலகட்டத்தில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகின்றது. மனிதனாகப் பிறப்பது அரிது அரிதான அப்புறப்பினைப் பெற்றுவிட்டால் கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்வது சிறப்பு.
கல்வியின் மூலம் ஒருவரது வாழ்வில் சிறப்பை பெற முடியும். கல்வியின் சிறப்பினை இக்கட்டுரையில் காண்போம்.
கல்வியின் சிறப்பு
கற்றவருக்கச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள எந்த செல்வங்களையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தினை எக்காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது.
கல்விச் செல்வம் நெருப்பினால் வேகாது, வெள்ளத்தால் அழியாது, கள்வர்களால் திருட முடியாது. கல்வியானது மனிதனை சிறந்த ஒழுக்கம் உள்ளவனாக மாற்றுகின்றது. மிருகக் குணங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது.
ஒருவர் கற்ற கல்வியானது பலருக்கும் பயன் தரும். கல்விதான் ஒருவனை அறிவாளியாக்குகின்றது. கற்றவர்கள் தமது நாடு ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அது அவர்களது நாடாகும்.
கல்வியின் முக்கியத்துவம்
“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று ஒளவையார் கூறுகின்றார். அதாவது எவ்வளவு கடினபட்டாலும் கல்வியை பெற்றுவிட வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்துகின்றார். இதன் மூலம் ஆதிகாலம் தொட்டே கல்வியின் முக்கியத்துவம் வெளிப்படுவதை அறியலாம்.
நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், வறுமையைப் போக்கவும் கல்வி மிகமிக முக்கியமானதாகும். உலகை மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு உண்டு. நல்லவை, தீயவை என பிரித்தறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி முக்கியமானதாகும்.
கல்வியின் பயன்கள்
கல்வி கற்பதன் மூலம் எல்லா வளங்களும் கிடைக்கும். கல்வியால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களையெல்லாம் வெல்லமுடியும். மனபயத்தினை போக்கும் வல்லமை கல்விக்கு உண்டு. கல்வியானது வறுமையில் கைகொடுக்கும். கல்வியின் பயனே மனித வாழ்வின் பெரும் பேறாகும். கல்வியானது நிலையானது வாழ்வில் எப்போதும் தொடரக்கூடிய ஓர் செல்வமாகும்.
இளமையில் கல்வி கற்கும் போது கல்வியானது நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும், உயர் பதவிகளையும் பெற்று தரும். இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்வடையச் செய்யலாம்.
கல்வியால் உயர்ந்தவர்கள்
கல்வியால் தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவிற்கு எவருமில்லை. கல்வியால் பல்வேறுபட்ட நபர்கள் உயர்வடைந்துள்ளனர். அப்துல் கலாம், அம்பேத்கர், சுந்தர் பிச்சை, கல்பனா சாவ்லா போன்ற பலர் கல்வியால் உயர்வு அடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் எமக்கு ஒர் முன்னுதாரணமானவர்கள்.
இவர்கள் சிறுவயதிலிருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வமே இவர்களை உலகம் கொண்டாடும் மனிதர்கள் ஆக்கியுள்ளது. சிறந்த கல்வி மனிதனை உயர் இடத்திற்கு இட்டுச் செல்லும் என்பதனை இவர்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது.
முடிவுரை
உலகின் விலைமதிப்பற்ற அழியாச் செல்வமான கல்வியினை நாம் அடைவதற்கு பாடுபடவேண்டும். நாம் பெற்ற கல்வியை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகல் நன்று.
கல்வியினைப் பெறுவது அனைவரதும் உரிமையாகும். உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் கல்வியினை ஆர்வத்துடன் சிறுவயதிலிருந்தே கற்க வேண்டும்.
கற்ற கல்வியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
The best
ReplyDeleteaiye munjiya paruu chi kunji
Delete