தடுப்பூசி மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதே கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய கேடயமாக உள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் நாட்டின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடங்குகிறது.
மத்திய அரசே நாட்டில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு அளிக்கும் கொள்கை மாற்றம் அமலுக்கு வருவதால் நாட்டின் தடுப்பூசி திட்டம் கூடுதல் வேகம் பெறுமா என்கிற முக்கிய கேள்விக்கான விடையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு நீண்ட வரிசைகள் மற்றும் அதேநேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் வதந்திகள் காரணமாக தடுப்பூசியை தவிர்க்கும் எண்ணம் என பல்வேறு வகையான யதார்த்தங்களுக்கிடையே, கொரோனா மூன்றாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சம் வலுப்பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசி திட்டத்தில் அடுத்த கட்டம் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும்; அடுத்த சில மாதங்களில் தடுப்பூசிகளின் தட்டுப்பாடு தீருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மே மாதத்திலேயே இந்திய மக்களுக்கு கிடைத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. கொரோனா வைரஸ் பெருந்தோற்று இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த சூழலில், மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினார்கள். போதிய அளவில் தடுப்பூசிகள் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியை மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் சார்பாக தொடர்ந்து எழுப்பிவந்தன. கடும் எதிர்ப்பின் அழுத்தத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால், மாநில அரசுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் கொள்கையை கைவிட்டு, மத்திய அரசு தடுப்பூசிகளின் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் ஜூன் மாதம் இந்திய மக்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியாக உயர்ந்துள்ளது.
மே மாதத்தை விட 50% தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் அதிகரிக்கப்பட்டாலும், இப்போதைய சூழ்நிலையில் இது போதுமானதாக இல்லை. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலே மூன்றாம் அலை இந்தியாவை தாக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தில் வேகம் மேலும் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். நாடு முழுவதுமே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தினசரி சராசரியை மூன்று மடங்கு அதிகரித்து ஒவ்வொரு நாளும் ஒரு கோடி நபர்களுக்கு தடுப்பூசி அளித்தால் மட்டுமே மூன்றாவது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதுவரை நாட்டின் ஒட்டுமொத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் 2 டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதுககு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் 20 கோடி நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 25 கோடியாகவும், பின்னர் செப்டம்பர் மாதத்தில் 30 கோடியாகவும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் எனவும் பிற தடுப்பூசிகள் அதிகம் கிடைக்க அடுத்த இரண்டு மாதங்களிலேயே வாய்ப்பு குறைவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதாரணத்திற்கு, அடுத்த மாதத்தில் 10 கோடி கோவிஷில்டு தடுப்பூசிகள் மற்றும் ஏழரை கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தவிர தனியார் மூலம் இறக்குமதி செய்யப்படும் இரண்டரை கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும் ஜூலை மாதத்தில் கிடைக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க அரசு தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அளித்து உதவி செய்ய முடிவு செய்திருப்பதால், அதிலிருந்து சில கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இதற்கான விவரங்களை அமெரிக்க அரசு இறுதி செய்யவில்லை.
மத்திய அரசு சமீபத்தில் பயாலஜிக்கல்-ஈ நிறுவனத்திடம் முப்பது கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதைத் தவிர சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே தயாரித்து வரும் கோவிஷீல்டு தவிர இன்னொரு தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்படி தடுப்பூசிகளின் கொள்முதல் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எத்தனை சதவீதத்தினருக்கு மூன்றாம் அலைக்கு முன்பாக தடுப்பூசி கிடைக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
தடுப்பூசிகளின் கொள்முதல் அதிகரிக்கும் நிலையில், அத்துடன் விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அதிகரிப்பதும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. இதுவரை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளின் கிட்டத்தட்ட 6% வீணாகி உள்ளது மிகவும் வருந்தத்தக்க தகவலாகும். மத்திய அரசின் திட்டப்படி இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியாவில் 216 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். அதாவது, எட்டு கோடி நபர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி அளிக்க முடியும். ஆனால், இதில் தாமதங்கள் இல்லாமல் எப்படி தவிர்க்கப்படும் என்பதும் தடுப்பூசிகள் வீணாகாமல் பொதுமக்களை சென்றடையுமா என்பதும் முக்கிய கேள்விகள்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இன்னமும் எந்த தடுப்பூசியும் ஒப்புதல் பெறவில்லை என்பதும் மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழி இல்லை என்பதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க ஏற்ற சூழல் இல்லை. இத்தகைய சவால்களுக்கு இடையேதான் தடுப்பூசி கொள்கையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அத்துடன் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கிறது. அதேசமயத்தில் நாட்டில் உற்பத்தியாகும் 25% சதவிகிதம் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பொதுமக்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டுக்கு விநியோகிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுமையை ஓரளவுக்கு குறைக்கும்.
Comments
Post a Comment