வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் வாயிலாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
இதில் ராக்கெட் வாயிலாக புவிவட்ட சுற்றுப் பாதைக்கு 4,000 கிலோ வரையும், குறைந்த தாழ் வட்ட சுற்றுப்பாதைக்கு 8,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை பிற நாடுகளின் உதவி கொண்டு விண்ணில் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அதனால் நமக்கு செலவீனம் அதிகரிப்பதுடன், கால விரயமும் ஏற்பட்டது.
இதையடுத்து அனைத்து ராக்கெட்களின் உந்துவிசைகளை அதிகரிக்கும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்பலனாக இஸ்ரோவின் பாகுபலி என்றழைக்கப்படும் எல்விஎம்-3 ராக்கெட்டின் எஸ் 200 மோட்டார்கள், விகாஸ் இயந்திரம், கிரையோஜெனிக் இயந்திரம் ஆகியவற்றின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு அதன் உந்துவிசை வழக்கத்தைவிட 14 விநாடிகள் வரை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை விண்ணில் புவிவட்டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் ஞாயிறன்று (நவ,2) மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடத்தில் செயற்கைக்கோளை 169 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட புவிவட்ட பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதன் சுற்றுப்பாதை படிபடியாக மாற்றப்பட்டு குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவும் கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதற்கிடையே கடற்படை பயன்பாட்டுக்காக 2013-ல் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அதற்குமாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோள் தற்போது ஏவப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இதில் விரிவுபடுத்தப்பட்ட யுஎச்எப், சி, க்யூ, எஸ் போன்ற மல்டி பேண்ட் அலைக்கற்றைகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இது முழுவதும் இந்திய கடற்படை மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். #L#isro
Comments
Post a Comment