பாதுகாப்பாகத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிட
சில முக்கியமான முதலுதவிக் குறிப்புகளை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
முதலில் பட்டாசு மற்றும் மத்தாப்புகளால் தீக்காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
குழந்தைகள், சிறார் , சிறுமியரை பெரியோர்களின் மேற்பார்வையின்றி
பட்டாசு மற்றும் மத்தாப்பு கொளுத்த அனுமதி வழங்கக் கூடாது.
கட்டாயம் பெரியோரின் மேற்பார்வையிலேயே அவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்.
சிறார் சிறுமியரை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் பெரியோரே
கையில் பட்டாசு வைத்து வெடிப்பது,
கையில் ராக்கெட் விடுவது போன்ற காரியங்களை அறவே தவிர்த்து விட வேண்டும்.
தலை தீபாவளி கொண்டாடும்
புது மாப்பிள்ளைகள் தங்களின் வீர தீர செயல்களைக் காட்டுகிறேன் என்று
கையில் அணுகுண்டு வெடிப்பது,
பெரிய சரத்தை கையில் தூக்கி எரிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவல்ல வீரம். நன்றி.
பட்டாசு / மத்தாப்பு வெடிக்கும் இடத்தில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும் . இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம்.
பட்டாசு மத்தாப்பு கொளுத்துமுன் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாடைகளைத் தவிர்க்க வேண்டும். தரையில் தட்டும் பேண்ட்கள், தொல தொலவெனத் தொங்கும் துப்பட்டாக்கள், வேட்டிகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
நல்ல டைட் ஃபிட் ட்ரெஸ் - டீ சர்ட் / ட்ராக் ட்ரவுசர் போன்றவற்றை போட்டுக் கொள்வது நல்லது.
பட்டாசு / மத்தாப்பு கொளுத்தும் இடத்தில்
வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் வெடிக்காத பட்டாசு/ மத்தாப்பு போன்றவற்றை மீண்டும் கொளுத்த தீமூட்ட முயற்சி செய்யக் கூடாது.
இத்தகைய தீக்காய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகும்
தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடுத்தியிருக்கும் துணியில் தீப்பற்றிக் கொண்டால்,
அது வேட்டியாக இருப்பின் உடனே யோசிக்காமல் வேட்டியை அவிழ்த்து தூர எரிந்து விட வேண்டும். இயன்றவரை வேட்டி போன்ற லூஸ் ட்ரெஸ்களை தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை சட்டையில் தீப்பற்றிக் கொண்டாலோ அல்லது சேலையில் அல்லது சல்வாரில் தீப்பற்றினால்
உடனே
நின்ற இடத்தில் இருந்து அப்படியே கீழே படுத்துக் கொண்டு உருள வேண்டும்.
(STOP - DROP - ROLL)
நிற்க - கீழே படுக்க - உருளுக
தீ முழுவதுமாக அணையும் வரை
இவ்வாறு முன்னும் பின்னும் உருண்டு கொண்டே இருக்க வேண்டும்.
அதை விடுத்து பற்றி தீயை கை கொண்டு தட்டி விட்டு அணைப்பது அல்லது
தண்ணீருக்காக அலைந்து திரிந்து நேரத்தை வீணடிப்பது தவறு.
இவ்வாறு உருளுவதால், தீ எரிவதற்குரிய ஆக்சிஜன் கிடைக்காமல் தீ தானாக அணைந்து விடும்.
----
தீக்காயத்துக்கு என்ன முதலுதவி?
ஒருபோதும் தீக்காயத்தில்
பல் விலக்கும் பேஸ்ட்
ஃப்ரிட்ஜில் வைத்த மாவு
ஐஸ் கட்டி
இங்க்
வெண்ணெய்
போன்றவற்றை தடவக் கூடாது.
இந்தப் பொருட்கள், வெப்பத்தை தக்க வைக்கும் என்பதால் இன்னும் காயம் பெரிதாகக் கூடும். கூடவே தொற்று அபாயமும் அதிகரிக்கும்.
உடனடியாக தீக்காயம் பட்ட இடத்தை
ஓடும் குழாய் நீரில் காட்டி குளிர்விக்கச் செய்ய வேண்டும்.
தீ என்பது வெப்பம். வெப்பத்தினால் நமது செல்கள் தசைகளுக்கு ஆபத்து. எனவே வெப்பத்தை தணிப்பதற்கு குளுமையான ஓடும் நீர் உதவும். இவ்வாறு இருபது நிமிடங்கள் தீக்காயத்தை நீர் கொண்டு குளிர்விக்க வேண்டும்.
குளிர்வித்த பிறகு,
சில்வர் சல்ஃபா டயசின் களிம்பைப் பூசி அதற்கு மேல் ஒட்டிக்கொள்ளாத ட்ரெசிங் (STERILE NON ADHESIVE BANDAGE) போட்டு மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
ஒருபோதும் பஞ்சு வைத்து அமுக்கக் கூடாது. வேறு ஏதேனும் மூலிகைத் தைலங்கள் உபயோகிக்கக் கூடாது.
கை கால்களில் தீக்காயம் பட்டிருப்பின்
உடனடியாக கை வளையல்கள், மோதிரம், வாட்ச், கொலுசு, இறுக்கமான உடை போன்றவற்றை கழட்டி விட வேண்டும். காரணம் - கொஞ்ச நேரத்தில் தீக்காயம் வீங்கக் கூடும். அப்போது கழட்ட முடியாமல் போகலாம்.
கண்களில் காயம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?
கண்களை சுத்தமான குளிர்ச்சியான நீர் கொண்டு நன்றாக அலச வேண்டும்.
கண்களைக் கட்டாயம் தேய்த்து விடக்கூடாது. இது பட்டாசுத் துகள்களை மேலும் உள்ளே அழுத்தி விடக்கூடும்
இரு கண்களையும் சுத்தமான துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் எந்த பட்டாசுத் துகள்களையும் நீங்கள் எடுக்க முயற்சிக்கக் கூடாது.
நேரடியாக கண்கள் நல சிறப்பு நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் தக்க சிகிச்சையை உடனே வழங்குவார்.
-----
தீக்காய விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்
நீரிழப்பு (Dehydration)
தீக்காயத்தின் அளவைப் பொருத்து
நமது உடலில் இருந்து நீர் சத்து குறைவான நேரத்தில் தீவிரமான அளவு இழப்பு ஏற்படும்.
அதிலும் உடலின் பரப்பளவில் 10%க்கு மேல் உள்ளாகும் தீக்காயங்களுக்கு கட்டாயம் அட்மிஷன் செய்து ரத்த நாளம் வழி க்ளூகோஸ் ஏற்ற வேண்டும்.
குழந்தைகள் சிறார் சிறுமியரைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நாம் இருக்க வேண்டும்.
தீக்காயம் பட்ட இடத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க முறையான மருத்துவ சிகிச்சை செய்து அதற்குரிய
ஆண்டிபயாடிக் மருந்துகள், களிம்புகள் பூசப்பட வேண்டும். டிடி ஊசி போடப்பட வேண்டும்.
தீபாவளித் திருநாளை
சொந்தங்களுடன்
மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து
மகிழ்ச்சியுடனும் பாதுகாப்பாகவும்
கொண்டாடிட வாழ்த்துகிறேன்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Comments
Post a Comment