Skip to main content

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகை

 புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகை


புதுச்சேரியில், அமைச்சரவை ஒப்புதல் அளித்து கோப்பு அனுப்பி, 40 நாட்களுக்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசுநேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளது.


இதனால், இன்று கலந்தாய்வு தொடங்கவில்லை. பட்டியல் வெளியிடப்பட்டு, விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய அனுமதியால், நடப்பாண்டில் 37 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் தகுதி பெற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் பெறப்பட்டுள்ளன.


இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அமைச்சரவையின் இந்த பரிந்துரை கோப்பு ஆளுநர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தாமதத்துக்கு காரணம்: உடனே ஆளுநர் தமிழிசையும் ஒப்புதல் அளித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பை அனுப்பி வைத்தார். அந்த கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்தை புதுவை அரசு அனுப்பியது. முக்கியமாக முந்தைய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அப்போது அமைச்சரவை அனுப்பிய இது தொடர்பான கோப்பில் எழுதிய குறிப்புகளும் தாமதத்துக்கு முக்கிய காரணமானது.


2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வை அக்.10-ம் தேதிக்குள் முடித்து, மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். இதேபோல், பொறியியல் படிப்புக்கு செப்.15-ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடித்து மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். 10 சதவீத இடஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் கலந்தாய்வு நடக்காமல் இருந்தது.


இந்நிலையில் அனுமதி வந்தாலும், வராவிட்டாலும் கலந்தாய்வை செப்டம்பர் 5-ம்தேதி முதல் நடத்தவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோப்பு அனுப்பி 40 நாட்களுக்குப் பிறகு, மத்திய அரசின் ஒப்புதல் நேற்று இரவு கிடைத்துள்ளது. புதுவை மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.


இது குறித்து நேற்று இரவு அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணை நிலை ஆளுநரின் பரிந்துரையோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.


ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு புதுவை மக்கள் சார்பாக எனதுமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும்.


அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடஒதுக்கீட்டுக்காக பணியாற்றிய முதல்வர் தலை மையிலான புதுவை அரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட் டுள்ளார்.


இன்று கலந்தாய்வு கிடையாது: இது தொடர்பாக அரசு அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்த போது, ‘‘மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்க வில்லை. அனுமதி கிடைத்துள்ளதால் கலந்தாய்வு பட்டியல் இன்று வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் கலந்தாய்வை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் விரைந்து அரசு தரப்பில் கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றனர்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers