பிளஸ் 2-வுக்குப் பிறகு: உதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்!
பிளஸ் டூவுக்குப் பிறகு எடுக்கும் முடிவுதான் பெரும்பாலான நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை நம்முடைய பொருளாதாரத் தடைகள் தீர்மானிக்க விடலாமா? நிச்சயமாகக் கூடாது.
ஒரு காலத்தில் வசதியானவர்கள் மட்டுமே படிக்கக்கூடியதாகக் கருதப்பட்ட உயர்கல்வி இன்று எல்லாத் தரப்பு மக்களும் படிக்கக்கூடிய கல்வியாக மாறி உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் அரசு அளிக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகளும் சலுகைகளும்தான்.
அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (AICTE) ‘பிரகதி’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவிகள் இலவசமாகப் பொறியியல் கல்வி பயிலக் கல்வி கட்டணம் முழுவதையும் கல்லூரிகளுக்கே செலுத்திவிடுகிறது. இதற்குப் பிளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்கள் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் சிறுபான்மை துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். ஆண்டுதோறும் உதவித்தொகையைப் பெற அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். கல்லூரியில் படிக்கும்போது அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைய வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெற ‘National Scholarship Portal’-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
மாநில அரசானது முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.25 ஆயிரம் கல்விக் கட்டணமாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கே அரசு சார்பில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது. அரசு ஒதுக்கீட்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. பொறியியல் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வில் கலந்துகொண்டு முதல் தலைமுறைப் பட்டதாரிச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். முதல்தலைமுறைச் சான்றிதழை தாலுகா அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்துப் பெற வேண்டும்.
பட்டியலின மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை உள்ள கல்லூரிகளைத் தேர்வுசெய்து படிக்கலாம்.
மேலும் சில அரசு, தனியார் அமைப்புகளும் கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகின்றன. அதில் ‘LIC Golden Jubilee’கல்வி உதவித்தொகை, ‘Indian Oil Academic Scholarship’, ‘HDFC Scholarship’, ‘North South Foundation’கல்வி உதவித்தொகை, ‘Fair and Lovely Scholarship for Women’போன்றவற்றை பெற அவற்றின் இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிக் கடனைப் பெற விரும்புவோர் ‘www.vidyalakshmi.com’என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். மாணவர், பெற்றோரின் பான் கார்டு, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தேர்ந்தெடுத்த கல்லூரியில் பெறப்பட்ட ‘Bonafide Certificate’ போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். எனவே, உயர்கல்விக்குப் பொருளாதாரச் சூழ்நிலை என்பது எந்த வகையிலும் தடை இல்லை என்பதைப் பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
Comments
Post a Comment