நிலநடுக்கத்தை காட்டுப்பறவைகள் முன்கூட்டியே உணர்கிறதா? - ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன?
நிலம் மற்றும் ஆகாயத்தில் நிகழப்போகும் சில மாற்றங்களை பறவைகள் மற்றும் விலங்குகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன என்றொரு கருத்து நிலவிவருகிறது. அதற்கு அவற்றின் உணர்திறனானது மனிதர்களிடம் இருந்து மாறுபட்டு காணப்படுவதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை பறவைகள் கூட்டம் முன் உணர்ந்து வெளிப்படுத்தியதாக வீடியோ ஒன்று நேற்றில் இருந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை அறிந்துகொள்கிறதா? அப்படி பறவைகளால் அறிந்துகொள்ள முடியும் என்றால் உயிர்ச்சேதத்தை தடுக்கலாம் என விளக்குகின்றனர் நிபுணர்கள்.
காட்டுப்பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை உணர்கிறதா?
நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்திவருகின்றனர். நிலநடுக்கத்தால் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும், எங்கெல்லாம் நிலநடுக்கம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதை தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தோராயமாக கண்டறியமுடியும். ஆனால் எங்கு மற்றும் எப்போது என்பதை யாராலும் துல்லியமாக சொல்லமுடிவதில்லை. ஆனால் காலங்காலமாக பறவைகள் மற்றும் விலங்குகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணர்வதாகக் கூறுகின்றனர்.
சீனா மற்றும் ஜப்பான்
நிலநடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணரமுடியுமா, எந்த உயிரினத்தால் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே உணரமுடியும் என்பதை கண்டறிய அவற்றின் நடத்தைகளை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் ஜப்பானில்தான் இவை அதிகளவில் நடத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் முன்கூட்டியே ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என நம்பப்படுகிறது.
image
ஓக்லஹோமா நிலநடுக்கம்
குறிப்பாக ஓக்லஹோமா நிலநடுக்கத்திற்கு பிறகு பறவைகளின் நடத்தையானது ஆராய்ச்சியாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி காலை 7.03 மணியளவில் ஓக்லஹோமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு ரேடார் புகைப்படங்களை கவனித்த ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த புகைப்படங்கள் ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பறவைகள் அந்தப் பகுதியிலிருந்து கூட்டமாக பறந்து சென்றுவிட்டன. இது ஒருவேளை பறவைகளுக்கு நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்குமோ என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர்களிடையே எழுப்பியது.
ரேடார் புகைப்படங்கள்
இந்த ரேடார் புகைப்படங்கள் ஆராய்ச்சியாளர்களிடையே விவாத பொருளானது. சில நிபுணர்கள் பறவைகள் முன்கூட்டியே பறந்தது தற்செயலாக நடந்ததுதான். அதிகாலையிலேயே குறிப்பாக சூரிய உதயத்துக்கு முன்பே வானில் பறப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில் காலை 7.04 மணிக்கு சூரியன் உதயமானது. அதற்கு முன்பே பறவைகள் வானில் பறந்தது இயல்பானதுதான் என்கின்றனர்.
image
நிலநடுக்கம் கணிக்கப்பட்டதா? அல்லது தற்செயலானதா?
நிலநடுக்கம் நாளில் எடுக்கப்பட்ட ரேடார் புகைப்படங்களை அடுத்த நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர் ஆராய்ச்சியாளர்கள். காலநிலை மற்றும் சூரிய உதயம் என அனைத்தும் ஒரேமாதிரியாக இருந்ததால் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் மறுநாளும் பறவைகள் அதேபோன்றுதான் வானில் பறந்தன. ஆனால் அந்த நாளை முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் இயக்கம் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்படுவதை ஒருவேளை பறவைகள் முன்கூட்டியே அறிந்திருந்தால் அவைகளுக்கு நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணமான P அலைகளை உணரும் தன்மை இருக்கக்கூடும். இந்த அலையானது பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய S அலையாக உருவாகும் முன் மேலே வந்தடைகிறது. மனிதர்களால் P அலையை உணரமுடியாது. ஆனால் விலங்குகளுடைய துல்லிய உணரும் தன்மையால் அந்த அலைகளை உணரமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பெரு ஆராய்ச்சியாளர்கள்
விலங்குகளின் முன்கூட்டியே அறியும் தன்மைக்கு ஆதரவாக பெரு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக motion-activated கேமிராக்களை வைத்து விலங்குகளின் இயக்கங்களை கண்காணித்தனர். இந்த கேமிராக்கள் தினசரி 5 அல்லது அதற்கும் குறைவான விலங்குகளின் இருப்பிடங்களின் இயக்கங்களை கண்காணித்தது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்திற்கு முன்பு இப்படி 23 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டது. இப்படி 5 முதல் 15 இடங்களில் கண்காணிக்கப்பட்டதில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் எந்தவித விலங்குகள் நடமாட்டமும் இல்லை.
image
ஹைசெங்
1975ஆம் ஆண்டு சீன நகரமான ஹைசெங்கில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து நகரத்தை காலிசெய்யும் வேலை நடந்தது. அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விலங்குகளின் நடத்தையில் வித்தியாமான மாற்றங்கள் ஏற்பட்டதாக பலர் தெரிவித்தனர். அதில் எந்த காரணமும் இல்லாமல் வாத்துகள் மரங்களின்மீது பறந்து அமர்ந்ததும், பன்றிகள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டதும் அடக்கம் என தெரிவித்துள்ளனர்.
தற்போது துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்திற்கு முன்பு பறவைகளின் வித்தியாசமான இயக்கம் மற்றும் கூட்டாக வானில் பறந்த வீடியோ ஒன்று இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதிலிருந்து மனிதர்களுக்கு தெரியாத, உணரமுடியாத சில அலைகளை விலங்குகளும், காட்டு பறவைகளும் உணர்கின்றன என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதில் நிலநடுக்கமும் ஒன்றா என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment