எஸ்.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும்?
எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-S.S.C.) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆட்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆண்டுதோறும் மேற் கொள்கிறது.
பட்டதாரிகள், பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது குரூப்-சி பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி தகுதியிலான (Combined Higher Secondary Level Examination) தேர்வுக்குரிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் மூலம் சுமார் 4500 பேர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தர் (Lower Division Clerk), இளநிலை தலைமைச் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) போன்ற பணிக்காலியிடங்கள் இதில் அடங்கும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி, தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் எவை, அவற்றில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பது போன்ற விவரங்கள் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தத்தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது மற்றும் வினாத்தாள் எப்படி அமைந்து இருக்கும், தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் விவரம் போன்றவை இந்த வாரம் இடம்பெறுகிறது.
இன்றைய அலட்சியம். நாளைய ஏமாற்றம்
பெரும்பாலானவர்களுக்கு SSC தேர்வுகள் குறித்து தெரிவதில்லை. தெரிந்தவர்கள் சிலரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதப் பகுதிகள் குறித்த அச்சம் சிலருக்கு. கணிதத்தில் சிறந்து விளங்குபவர்கள் கூட அலட்சியமாக இருக்கின்றனர்.
இத்தேர்விற்கு எப்படித் தயாராவது, எங்கிருந்து தயாரிப்பைத் தொடங்குவது, எதைப் படிப்பது போன்றவை குறித்து சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், விண்ணப்பித்த பிறகு, தேர்வுக்காக ஒரு சிலர் படிப்பதில்லை. SSC தேர்வு எழுதாததற்கு நமது மாணவர்கள் கூறும் காரணங்களைக் காண்போம்.
1. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பது.
ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். பள்ளிக்கல்வி முழுவதையும் தமிழ்வழியில் படித்துவிட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் பயில்கிறோம். ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகத் தோன்றும். முதல் செமஸ்டரில் சற்று சிரமப்படுவோம். பின்பு எளிதாக அதற்கு நாம் பழக்கமாகி விடுவோம். அதைப்போலத்தான் வினாத்தாளை பார்த்து பயிற்சி செய்தால் பழகிவிடும்.
2. எனக்கு ஆங்கிலம் தெரியாது. என்னால் ஆங்கிலப் பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க முடியாது.
ஆங்கிலப் பகுதியில் இருந்து முதல்கட்டத் தேர்விற்கு 25 வினாக்களும், இரண்டாம் கட்டத் தேர்விற்கு 40 வினாக்களும் கேட்கப்படுகின்றன. இவை நீங்கள் நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல. பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. Synonyms, Antonyms, Idioms/Phrases, Voice and Tense, Comprehension Passage, Cloze Passage, One word Substitution போன்ற எளிமையான பகுதிகள்தான் உள்ளன. பத்தாம் வகுப்பில் படித்த அடிப்படை ஆங்கில இலக்கணப் பகுதியை மீண்டும் ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது.
3. எனக்குக் கணக்குப் பாடம் வராது. கணிதம் விரைவாக செய்ய முடியாது.
வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல. கணிதப் பகுதியைப் பொறுத்தவரை தினசரி இரண்டு மணி நேரம் வீதம் குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் பாடத்திட்டத்தை முடித்து விடலாம். கவலை வேண்டாம். கணிதப் பாடத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதிகளான Algebra, அளவியல், புள்ளியியல், நிகழ்தகவு, முக்கோணவியல், வடிவியல் (Geometry), போன்றவை நீங்கள் பள்ளியில் ஏற்கனவே படித்தவைதான். அடிப்படையாக முதலில் பள்ளிப் புத்தகங்களை படித்துவிட்டு முந்தைய வினாத்தாளை ஒருமுறை பாருங்கள். பின்பு SSC தேர்வுக்கான புத்தகங்களை பயிற்சி செய்யுங்கள். பயிற்சி வகுப்பு செல்லும்போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள்.
4. நான் முயற்சி செய்து விட்டேன்.
என்னால் ஒரு மணி நேரத்திற்குள் விரைவாக விடையளிக்க முடியவில்லை மற்றும் ரீசனிங் பகுதியில் பெரும்பாலான வினாக்கள் புரியவில்லை. புதியதாக படிக்கத் துவங்கும்போது, Reasoning மற்றும் Maths சில பகுதிகள் கடினமானதாக இருக்கலாம். ஆரம்பத்தில் புரியாததால் மனச்சோர்வு ஏற்படலாம். இதைத் தவிர்க்க இத்தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுடன் கலந்துரையாடலாம். தொடர்ந்து நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள்.
5. இத்தேர்விற்கு தேவையான புத்தகங்கள், பாடக்குறிப்புகள் என்னிடம் இல்லை.
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இத்தேர்விற்கு தயாராவது குறித்து அனைத்து தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது. தேவையான புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ளன.
இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரித் தேர்வுகள் போன்றவை தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https: tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் எவ்வித கட்டணமுமின்றி கிடைக்கிறது.
6. பணம் செலுத்தி பயிற்சி வகுப்பிற்கு செல்ல எனக்கு வசதியில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற Youtube ல் கிடைக்கிறது. கல்வித் தொலைக்காட்சியில் இத்தேர்வுக்கான வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
7. திறன் தேர்வில் தட்டச்சு செய்ய வேண்டும். எனக்கு தட்டச்சு தெரியாது.
தட்டச்சு தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள் (Lower/Higher) எதுவும் தேவையில்லை. தட்டச்சு தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பகுதியை 10 நிமிடங்களுக்குள் தட்டச்சு செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வு (Tier 1) முடிந்த பிறகும் கூட 3 மாதங்கள் தட்டச்சு வகுப்பிற்குச் சென்று கற்றுக்கொண்டால் போதும். மொபைல் போனில் இரண்டு கை விரல்களையும் பயன்படுத்தி மிக விரைவாக மெசேஜ் டைப் செய்வதில் திறமைசாலியான உங்களுக்கு 3 மாதத்திற்குள் டைப்ரைடிங் கற்றுக்கொள்வது பெரிய விஷயம் அல்ல.
8. வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் வேலை கிடைத்தால் என்ன செய்வது?
முதலில் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சென்று சேருங்கள். உங்கள் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பணிக்காலியிடம் ஏற்படும்போது Transfer வாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் உங்கள் Comfort Zone -ஐ விட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும். வெளியூர் சென்று பணியாற்றும்போது உங்கள் பணியில் புது அனுபவத்தை பெறுவீர்கள். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அக்னி சிறகுகள் என்ற தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் மூலம் இதை அறியலாம். "மகத்தான லட்சியங்கள் நிறைந்த இடத்தை அடைவதற்கு நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீர வேண்டும்".
9. எனக்கு நேரமே இல்லை.
சமூக வலைத்தளங்களுக்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றுவதற்கு ஆகும் நேரத்தை முழுவதுமாக படிப்பதற்கு பயன்படுத்தலாம். தினசரி காலை நேரம் ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து படிக்கலாம். இரவில் 1 மணி நேரம் கூடுதலாக கண்விழித்து படிக்கலாம். விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
10. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.கல்லூரி முடித்த பின்பு பார்த்துக் கொள்ளலாம்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து சிந்திப்பது நல்லது. தினசரி ஒரு மணிநேரம் மட்டும் செலவழித்தால் போதும். உங்கள் கல்லூரிப் பாடத்தைப் படிக்கத் துவங்குவதற்கு முன் அரை மணிநேரம் கணிதம் அல்லது ரீசனிங் பகுதியை பயிற்சி செய்துவிட்டு உங்கள் கல்லூரிப் பாடத்தைப் படியுங்கள்.வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டித் தேர்வில் என்னால் வெற்றி பெற முடியுமா?
வெற்றி தோல்வியைப் பற்றி எண்ணாதீர்கள். கற்றுக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். முதலில் எழுதும் ஒன்றிரண்டு தேர்வுகளில் தோல்விகள் அடைய நேரிடலாம். கவலைப்படாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேர்ந்திடலாம்.
இன்னும் தயக்கம் ஏன்?
எவ்வித தயக்கமும், குழப்பமும் இன்றி இன்றே தேர்விற்கு விண்ணப்பியுங்கள். புத்தகக் கடைக்குச் சென்று இத்தேர்விற்கான புத்தகத்தை வாங்குங்கள்.
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி: தினத்தந்தி
எஸ்எஸ்சி தேர்வு - முதன்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி!
SSC MTS and Havaldar Examination: இந்நிலையில், நேற்று வெளியான அறிவிக்கையில், தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் முதற் தாள் கேள்விகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment