இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு (JEE - Joint Entrance Exam) அவசியமாகிறது. அதுபற்றிய விரிவான விளக்கங்களை வழங்குகிறார், ஸ்ரீராம். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல் பணியை கடந்த 5 வருடமாக, இலவசமாக செய்து வருகிறார். அவரிடம், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பற்றிய சிறு நேர்காணல்...
ஜே.இ.இ.தேர்வு பற்றி கூறுங்கள்?
இந்தியாவின் தலைசிறந்த பேராசிரியர்கள், உலக தரத்திலான சோதனை கூட வசதிகள் இருக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க, இந்த ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வழிகாட்டுகிறது.
யாரெல்லாம் எழுதலாம்?
பிளஸ்-2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடம் பயின்றவர்கள் யார் வேண்டுமானாலும், தமிழ் உள்பட 13 விருப்ப மொழிகளில் இந்த தேர்வினை எழுதலாம். குறிப்பாக சி.பி.எஸ்.இ., அரசுப்பள்ளி, மெட்ரிக்குலேஷன்... என எல்லா விதமான பாடத்திட்டங்களில் பயின்றவர்களும், இந்த தேர்வினை எழுதலாம்.
எப்போது, இந்த தேர்வு நடைபெறும்?
முன்பு ஒரு ஆண்டிற்கு, இரு முறை நடத்தப்பட்ட ஜே.இ.இ.தேர்வு, இப்போது 4 முறை நடத்தப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள், நான்கு முறையும் எழுதலாம். நான்கு தேர்விலும், அதிகபட்ச மதிப்பெண் பெறும் தேர்வினை தகுதியாக எடுத்துக் கொள்வார்கள்.
இதில் தேர்ச்சி பெற்றால், எங்கெல்லாம் படிக்கலாம்?
மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.
என்னென்ன பொறியியல் படிப்புகளை படிக்கலாம்?
60-க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது. பி.டெக். பி.பிளானிங், பி.டிசைன், பி.ஆர்க்., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். எம்.பிளானிங், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம்.
பிளஸ்-2 மாணவர்கள் எழுதலாமா? ஆம்...!
பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள்கூட, எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் இத்தேர்வை எழுதலாம். அதேபோல 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இத்தேர்வை எழுதலாம். அதாவது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும்.
தேர்வு நடைமுறை எப்படி இருக்கும்?
இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. (I.I.I.T-International Institute of Information Technology) நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் ஐ.ஐ.டி. (I.I.T-Indian Institute of Technology) கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும். அதாவது... இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது என்றால், இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.
வினாத்தாள் தயாரிப்பு எப்படி இருக்கும்?
300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திட்டத்தில் இருந்து, தலா 30 கேள்விகள் கேட்கப்படும். அதில் முதல் 20 கேள்விகள், கொள்குறி வினாக்களாக இருக்கும். கடைசி 10 வினாக்கள் கோடிட்ட இடங்களை நிரப்புவதாக இருக்கும். கேட்கப்படும் 90 கேள்விகளில், 75 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
சி.பி.எஸ்.சி. மற்றும் மாநில அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்வித்தாள் தயாரிக்கப்படும். கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்வது, இதுபோன்ற நுழைவு தேர்வுகளில் பலன் தராது. அதேபோல ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தயார் செய்தால் போதாது. எந்த விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வகையில் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
ஜே.இ.இ. மெயின் பற்றி விளக்கமாக கூறுங்கள்?
இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் இரு தாள்களுக்கும் தேர்வு நேரம் 3 மணி நேரம். முதல் தாள் ஆன்லைன் தேர்வாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். இதில் கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் மூன்று பாடங்களுக்கும் சம அளவு மதிப்பெண்கள் ஒதுக்கப்படும். இரண்டாம் தாளில் கணக்கு, வரைபடம் மற்றும் ஆப்டிடியூட் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும். ஆப்டிடியூட் கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே பதில் தெரியாத கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிடலாம்.
ஜே.இ.இ. அட்வான்ஸ் பற்றி விளக்குங்கள்?
ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 54,453 பேர் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்குள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டிலோ நடப்பு ஆண்டிலோ 12-ம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த ஐ.ஐ.டியிலும் ஏற்கனவே அட்மிஷன் பெற்றிருக்கக் கூடாது.
ஜே.இ.இ. தேர்வில் வெற்றிபெறுவது கடினமான விஷயமா?
இல்லை. சுலபமான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில், கடினமான தேர்வு என்ற தவறான புரிதல் இருக்கிறது. அதனால்தான், ஜே.இ.இ. தேர்வு பற்றி தெரிந்தவர்கள்கூட, அதில் பங்கேற்பதில்லை. இன்னும் சில மாணவர்களுக்கு, இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரிவதில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான மத்திய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என பிரத்யேக இட ஒதுக்கீடும் இருக்கிறது. இதனால் வருங்கால மாணவர்கள் ஜே.இ.இ.தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
சலுகைகள் எதுவும் உண்டா?
மிகக்குறைந்த கல்வி கட்டணம், உயர்தர அறிவியல் சோதனை கூடங்கள், திறமையான பேராசிரியர்கள், கற்பனை செய்திராத கல்லூரி வாழ்க்கை இவற்றோடு, மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், பட்டியலின மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களே, தேர்ச்சிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு இருக்கிறதா?
தனியார் கல்லூரி மாணவர்களைவிட, மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு/தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. 3-ம் ஆண்டிலேயே, சம்பந்தப்பட்ட துறை நிறுவனங்களின் நேர்காணல் நடத்தப்பட்டு, மாதம் 50 ஆயிரத்திற்கும் குறைவில்லாத சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
Comments
Post a Comment