நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்கவுள்ள நிலையில், பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக மழலைகளும், அவர்களது பெற்றோரும் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் 2019ல் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, 2020 மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. கடந்த மே மாதம் ஆரம்பித்த கொரோனா 2வது அலை, தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியிருந்த கல்வி பணியும் படிப்படியாக சகஜ நிலைக்கு மாறி வருகிறது. உயர்கல்வி வகுப்புகள் மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு வருகிற நவ.1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்குமென அரசு அறிவித்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தூய்மை பணிகள் துவங்கியுள்ளன.
கடந்த 19 மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த 1 முதல் 8 வகுப்பு மாணவ- மாணவிகள், மீண்டும் பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்பதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து நாங்குநேரியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் வினோத், ராமநேரியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி முத்து தனுஸ்கா, ரெட்டார்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவர் ஜெபஹர் ஆகியோர் கூறியதாவது:
பள்ளிக்கு சீருடை அணிந்து சென்று சக மாணவர்களுடன் அமர்ந்து பாடம் பயில்வதைத் தான் விரும்புகிறோம். வீடுகளில் கல்வி தொலைக்காட்சியில் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்க முடியாத நிலை உள்ளது. பள்ளிகளில் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, சக மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்பது போன்ற அனுபவங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இழந்துள்ளோம்.
ஆசிரியர்களை நேரில் பார்த்து கற்பதால் அதிக கவனத்துடன் கூடுதலாக கற்கும் திறமையை வளர்க்க முடியும், என்றனர். பள்ளி ேமலாண்மைக்குழு தலைவரும் பெற்றோருமான பேச்சித்தாய், ரெட்டார்குளம் பிரின்சிலாள் ஆகியோர் கூறியதாவது: பெரும்பாலான பெற்றோர் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் வீட்டில் இருந்து தொலைக்காட்சி மூலம் அல்லது ஆன்லைனில் கற்பதை கவனிக்க முடியவில்லை. அவர்களுக்கு எங்களால் பாடம் கற்றுக் கொடுக்கவும் நேரம் இல்லை. இதனால் கற்றல் குறைபாடு பல குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் குறைந்து உள்ளதால் அரசு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை திறக்க முன்வந்துள்ளதை வரவேற்கிறோம். வகுப்புகளில் சென்று படித்தால்தான் மாணவர்களின் கல்வி குறித்த கவலை எங்களுக்கு இருக்காது, என்றனர்.
Comments
Post a Comment