பெருந்தொற்றின் பின் விளைவாக அரசுப் பள்ளிகளின் சுமையும் சவாலும் அதிகரித்துள்ளன. இந்தச் சவாலை அவை எப்படி?
அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14 அன்று தொடங்கியது. வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் காட்சியை இந்த ஆண்டு காண முடிகிறது. தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பலரும் அரசுப் பள்ளிகளை நாடுவதாகத் தெரிகிறது.
2019-20 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 18605, இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 6533. 2020-21 கல்வியாண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்த மொத்த மாணவர்கள் 27843. இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து வெளியேறி மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14763.
2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய ஒரே வாரத்தில் 6897 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிடப் புதிய மாணவர்கள் அதிகமாக சேர வாய்ப்பு இருப்பதாகப் பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வருவது அதிகரித்துவந்தாலும் இந்த ஆண்டு அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஊரடங்கில் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக இந்தப் போக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரசுப் பள்ளிகளின் பங்கு
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று ஒரு பழமொழி உண்டு. வசதியற்றவர்களுக்கு அரசுப் பள்ளியே துணை என்று சொல்லலாம். இதே தர்க்கத்தை அரசு மருத்துவமனைகளுக்கும் விரிக்கலாம். ஏழை எளிய மக்கள் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அடிப்படையான உணவுப் பொருள்கள் முதலான பலவற்றுக்கும் அரசு அமைப்புகளையே நம்பியிருக்கிறார்கள். அம்மா உணவகத்தின் உருவில் உணவுக்கும்கூட அரசை நம்பியிருக்கும் ஏழைகள் பலர் இருக்கிறார்கள்.
தன்னுடைய குடிமக்களுக்கு இலவசமாகவோ மலிவான விலையிலோ அடிப்படைத் தேவைகள் கிடைக்கச் செய்வது அரசின் கடமை. அதுவும் மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமை அது. எனவே வசதியற்றோருக்கு இந்த வசதிகளை அரசு வழங்குவதில் வியப்பில்லை. இவை யாவும் வசதியற்றோருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அவர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகள்.
ஆனால், அரசு வழங்கும் வசதிகள், குறிப்பாகக் கல்வி எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். வசதியற்றவர்களுக்கு அரசுப் பள்ளியே துணை என்னும் கூற்றை நடைமுறையில் வசதியற்றவர்களுக்கு அரசுப் பள்ளியே கதி என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்தத் தரம்.
மிகவும் வசதியான உள்கட்டமைப்பு, உரிய படிப்பும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்கள் ஆகியவை இருந்தும் அரசுப் பள்ளிகளில் ஏன் தரமான கல்வியைத் தர முடியவில்லை எனபது பல ஆண்டுகளாகத் துன்புறுத்திவரும் கேள்வி. அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்களில் பலருக்கு (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்) அடிப்படை மொழியறிவு, அடிப்படையான கணிதத் திறன் ஆகியவை இருப்பதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. கற்பிக்கும் விதம், ஆசிரியர்களின் செயல்பாடு, அவர்களைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடு, வகுப்பு அளவில் நடைபெறும் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் எனப் பல அம்சங்களிலும் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் பல அடிகள் பின்தங்கியிருக்கின்றன.
எனினும், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து பல மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவதைக் காண முடிகிறது. அரசுப் பள்ளிகளின் தரம் அதிகரித்ததால் இத்தகைய வருகை நிகழ்கிறது என்பதல்ல. பெருந்தொற்றால் வேலையிழப்புகள் அதிகரித்து, பெற்றோர்களின் வருமானம் குறைந்ததே இதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
அரசுப் பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதுபோல, பெருந்தொற்றால் திடீர் வருமான இழப்பு ஏற்பட்டு, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வசதி இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு ஆபத்பாந்தவனாய்க் கை கொடுப்பது அரசுப் பள்ளிகளுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான். ஆனால், இந்தப் பெருமை என்பது பிறருடைய நெருக்கடியின் விளைவு. இதில் அரசுப் பள்ளிகள் செய்வதற்கு ஏதுமில்லை. இப்படிப் புதிதாக வரும் மாணவர்களுக்கும் ஏற்கெனவே தன்னையே நம்பியிருக்கும் மாணவர்களுக்கும் சிறப்பான கல்வியைக் கொடுப்பதுதான் உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்.
முடங்கிப்போன கல்வி
கொரோனா பெருந்தொற்று மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், கல்வித் துறையிலும் பெரும் சவால்களை முன்வைத்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடியாத நிலையில் இணைய வழிக் கல்வி, தொலைக்காட்சி மூலம் கல்வி எனப் பல புதிய வழிமுறைகளை உலகம் முழுவதிலும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
தனியார் பள்ளிகள் இணைய வழிக் கல்வி விஷயத்தில் காட்டிய அக்கறையிலும் செயல் திறனிலும் சிறிய அளவைக்கூட அரசுப் பள்ளிகள் காட்டவில்லை. இணைய வழிக் கல்வி என்பது பல பள்ளிகளைப் பொருத்தவரை வெறும் சம்பிரதாயமாகவே இருந்தது. ஆசிரியர்கள், மாணவர்களின் இணையத் தொடர்பு வசதிக் குறைவும் இதற்கு ஒரு காரணம். இதற்கு மாற்றாகக் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. இந்த ஆண்டும் பெருந்தொற்றின் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்காவிட்டால் சென்ற ஆண்டு முழுவதும் பாடம் நடத்தப்பட்ட லட்சணம் பல்லிளித்திருக்கும்.
எனினும் இன்னமும் பெரும்பாலான மாணவர்களுக்கான புகலிடமாக அரசுப் பள்ளிகளே இருக்கின்றன. வருமான இழப்பின் காரணமாகத் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் நாடிவரும் நிலையில் அரசுப் பள்ளிகளின் சுமை இன்னமும் அதிகமாகிறது.
இந்தச் சுமையைச் சவாலாக எடுத்துக்கொண்டு அரசுப் பள்ளிகள் உழைக்க வேண்டும். முன்னேறிய நாடுகளில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்கிவருகின்றன. அங்கு பெரும்பாலான மக்களின் தேர்வு அரசுப் பள்ளிகள்தான். அதேபோல இங்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் மக்கள் அரசுப் பள்ளிகளையே தமது முதலாவது தேர்வாகக் கொள்வார்கள்.
அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியிலும் பணிக்களத்திலும் பெரும் சாதனைகள் படைத்த பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் போலப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். அத்தகைய எடுத்துக்காட்டுக்கள் அண்மைக் காலத்தில் அதிகம் நிகழவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். காரணம், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்திற்குத் தரப்படும் முக்கியத்துவமும் கற்பித்தல் முறையில் உள்ள தேக்க நிலையும்தான்.
இது தீர்க்கவே முடியாத சிக்கல் அல்ல. முறையான கல்வித் தகுதியும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்கள் கூடுதல் ஈடுபாட்டுடன் தங்கள் பணியை அணுக வேண்டும். கற்பிக்கும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் அமைச்சரும் கல்வித் துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் கல்வித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த முடியும். இந்திய அளவில் தமிழ்நாட்டைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியும்.
Comments
Post a Comment