கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்புக் கல்வியாண்டில் தனியார் சுயநிதிப் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் 85 சதவீதத்தை மாணவர்களிடம் 6 தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும், கரோனா காலத்தில் வருமான இழப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் 75 சதவீத தொகையை 6 தவணைகளில் வசூலிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேபோல, கடந்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் தவணை முறையில் வசூலிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை நேரடி அல்லது ஆன்லைன் வகுப்பில் இருந்து விலக்கி வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளும் அறிவுறுத்தப்படுகின்றன. கல்வித் துறை அதிகாரிகளும், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் ஏதேனும் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவதுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment